இந்த வார ராசிபலன்

8-4-2018 முதல் 14-4-2018 வரை

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)

கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

8-4-2018- மகரம்.

11-4-2018- கும்பம்.

13-4-2018- மீனம்.

rasi

கிரக பாதசாரம்:

சூரியன்: ரேவதி- 3, 4, அஸ்வினி- 1.

செவ்வாய்: பூராடம்- 2, 3.

புதன்: பூரட்டாதி- 4,

உத்திரட்டாதி- 1.

குரு: விசாகம்- 4, 3.

சுக்கிரன்: பரணி- 1, 2, 3.

சனி: மூலம்- 3.

ராகு: பூசம்- 4.v கேது: திருவோணம்- 2.

கிரக மாற்றம்:

குரு வக்ரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

Advertisment

மேஷ ராசிநாதன் செவ்வாயும் செவ்வாய்க்கு வீடு கொடுத்த குருவும் பரிவர்த்தனை யோகமாக இருக்கிறார்கள். அத்துடன் 10-க்குடைய சனி 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும். எனவே இந்த வாரம் உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வி.ஐ.பி.யின் தொடர்பு ஏற்படும். அது உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அல்லது தொழில் முன்னேற்றத்துக்குப் பயன்படும். தொழில், வியாபாரத்துறையில் முன்னேற்றமும் வெற்றியும் எதிர்பார்க்கலாம். அடுத்த வாரம், பஞ்சமாதிபதி சூரியன் உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் புதிய தொழில் முயற்சிகள் திருப்திகரமாக நிறைவேறும். 7-க்குடைய சுக்கிரன் ஜென்ம ராசியில் பலம் பெற்று 7-ஆம் இடத்தையே பார்ப்பதால் திருமணத்தடை விலகும். திருமணமாக வேண்டிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். திருமணமானவர்களுக்கு வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு பெற்றெடுத்தவர்களுக்கு பிள்ளைகளின் படிப்பு மேன்மையடையும். படித்துப் பட்டம் பெற்ற பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலையும் வருமானமும் அமையும். வேலை பார்க்கும் பிள்ளைகளுக்கு விரும்பிய இடப்பெயர்ச்சி அல்லது ஊதிய உயர்வு உண்டாகும். 3, 6-க்குடைய புதன் 12-ல் நீசம் என்பதால் கடன்கள் கட்டுக்கடங்கிக் காணப்படும். கடன் இருந்தாலும் தொல்லையில்லாத கடன்; சுபக்கடன் எனலாம். மொத்தத்தில் இந்த வாரம் யோகமான வாரம்தான்.

பரிகாரம்: அனாதை இல்லத்தில் வாழும் பிள்ளைகளுக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் செய்யலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ரிஷப ராசிநாதன் சுக்கிரன் 12-ல் மறைகிறார். அவருக்கு வீடு கொடுத்த செவ்வாயும் ராசிக்கு 8-ல் மறைகிறார். ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனியும் 8-ல் மறைவதோடு செவ்வாயோடு சேர்க்கை. பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் செவ்வாயும் சனியும் சம்பந்தப்படுவது நல்லதல்ல! அவர்கள் எந்த பாவத்தில் இருக்கிறார்களோ அல்லது எந்த பாவத்துக்கு உடையவர்களோ அல்லது எந்த பாவத்தைப் பார்க்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினைகளும் மகிழ்ச்சிக்குறைவும் உண்டாகும். செவ்வாய் 7, 12-க்குடையவர். சனி 9, 10-க்குடையவர். இருவரும் 2-ஆம் இடம் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதோடு, சனி 3-ஆம் பார்வையாக 10-ஆம் இடத்தையும், 10-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும் பார்க்கிறார். செவ்வாய் 11-ஆம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 8-ல் இருவரும் கூடியிருப்பது கௌரவப் பிரச்சினையை உருவாக்கும். சிலர் காதல் திருமணம் அல்லது கலப்புத்திருமண முயற்சியில் இறங்கலாம். திருமணமானவர்களுக்கு கணவன்- மனைவிக்குள் கருத்துவேற்றுமை, பிரிவு- பிளவு ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் விவாகரத்து வரை பிரச்சினை போகலாம். தவிர்க்கமுடியாத செலவுகளும் பண நெருக்கடியும் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் முன்னேற்றமும் பொருளாதார சௌகர்யமும் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும். "ஒரு குருடி தண்ணி எடுக்கப் போனாளாம்- ஒன்பது குருடி துணைக்குப் போனார்களாம்' என்ற கதையாக இருக்கும்.

Advertisment

பரிகாரம்: அட்டமச்சனிக்காக, அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து (அந்த எண்ணிக்கையில்) மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி, சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய் தீபமேற்றவும். சனீஸ்வரருக்கு எள் தீபம் கண்டிப்பாக ஏற்றக்கூடாது.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

மிதுன ராசிநாதன் புதன் 10-ல் மீன ராசியில் நீசம் அடைகிறார். ராசிக்கு கேந்திரம் என்ற அடிப்படையிலும், புதனுக்கு வீடு கொடுத்த குருவின் பார்வையைப் பெறுகிறார் என்பதாலும், குருவுடன் பரிவர்த்தனை யோகம் பெறும் செவ்வாயும் புதனைப் பார்க்கிறார் என்பதாலும் புதனுக்கு நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது. அதனால் உங்களுக்கு மதிப்பு, மரியாதை, செல்வாக்கு, திறமை, செயல்பாடு இவற்றுக்குக் குறைவு வராது. புதன் 1, 4-க்குடையவர் என்பதாலும், வித்யா காரகன், மாதுல காரகன் என்பதாலும் தேக சுகம், சௌக்கியம், கல்வி யோகம், வாகன யோகம், பூமி, வீடு யோகம், தாயன்பு இவற்றுக்கும் பிரச்சினை வராது. 4-ஆம் இடத்தை சனியும் சூரியனும் பார்ப்பதோடு புதனும் பார்ப்பதால் ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் மட்டும் மேற்சொன்ன பாவங்களில் (வீடுகளில்) சிறுசிறு சங்கடங்களும் சஞ்சலங்களும் ஏற்பட்டாலும், பாவாதிபதி (புதன்) தன் பாவத்தைப் பார்ப்பதால் எல்லாப் பிரச்சினைகளும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும் என்பதையும் ஆணித்தரமாகக் கூறலாம். என்றாலும் 10, 7-க்குடைய குரு 6-ல் மறைவென்பதால் திருமணத்தடையும் தாமதமும் ஏற்படலாம். அல்லது சில தம்பதிகளுக்குள் கருத்துவேற்றுமை உருவாகி பிரிவு பிளவாக இருக்கலாம். குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை என்பதால் இருவருக்கும் "ஈகோ' பிரச்சினை உருவாகி, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் வீம்பும் வைராக்கியமும் வறட்டுப்பிடிவாதமும் உண்டாகலாம். பொதுவாக விட்டுக்கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. பைபிளில் ஒரு வாசகம்- "எவன் ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறானோ அவன் தெய்வ சந்நிதானத்தில் உயர்த்தப்படுவான்.'

Advertisment

பரிகாரம்: புதன்கிழமைதோறும் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய்தீபமேற்றி வழிபடவும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசியில் உள்ள ராகுவும் ஏழில் உள்ள கேதுவும் உங்களை திசைத் திருப்பம் செய்து அழைத்துச் செல்லப் பார்க்கும். தவறாக வழிநடத்துதல் என்று அர்த்தம். சிலருக்கு தானே அறிவாளி- புத்திசாலி என்றும், மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்றும் ஒரு "ஈகோ உணர்வு' இருக்கும். எல்லாருக்கும் அல்ல; ஒருசிலருக்கு மட்டுமே! அந்த ஒருசிலரில் நீங்கள் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன? எல்லாரையும் அனுசரித்துப் போகப் பழகிக்கொள்ள வேண்டும். "தீயினால் சுட்டபுண் ஆறிவிடும். நாவினால் சுட்டவடு ஆறாது' என்று வள்ளுவர் சொல்லுவார். தீக்காயம்- புண்; நாக்குச் சொல்- வடு என்கிறார். என்ன அற்புதமாக வள்ளுவர் சொல்லியுள்ளார்! வடு மாறாது- மறையாது! அவரே "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்றும் சொல்லுவார். கனிந்த சுவையான பழம் இருக்க- காயை விரும்பிச் சாப்பிடுகிறவரை என்னவென்பது? இதுதான் ராகு- கேது செய்யும் வேலை. குளத்தில் உள்ள மீன் தன் பசிக்கு அழுக்கைச் சாப்பிட்டாலும் குளம் சுத்தமடைவதுபோல, உங்கள் சுயநலத்தை மட்டும் பார்க்காமல் பொதுநலத்தையும் பார்த்தால் எல்லார் நெஞ்சிலும் நல்லவராக இடம் பிடிக்கலாம். இல்லாவிட்டால் நேருக்கு நேர் உங்களைக் குறைசொல்லாவிட்டாலும் முதுகுக்குப் பின்னால் உங்களை விமர்சனம் செய்யலாம். இது தேவையா? குரு ராசியைப் பார்ப்பதால் நீங்கள் நல்லவர்தான்! சனியோடு சேர்ந்த செவ்வாயும் பார்ப்பதால் போதை வயப்பட்ட நிலைக்குச் சமம்! (குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு).

பரிகாரம்: யோகா- தியானப் பயிற்சி அவசியம்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

சிம்ம ராசிநாதன் சூரியன் 8-ல் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த குருவும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் சூரியனைப் பார்க்கிறார்கள். எனவே, கௌரவம், செயல்பாடு இவற்றுக்குப் பிரச்சினையில்லை என்றாலும், எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் நினைத்தோம் முடித்தோம் என்றிருக்காது. முட்டி மோதி பிறகு குனிந்து செல்வதுபோல எல்லாச் செயல்களிலும் தடையும் தாமதமும் குறுக்கீடுகளும் காணப்படும். ஆனாலும் முடிவில் நினைத்ததை நிறைவேற்றலாம். கருதிய காரியங்கள் கைகூடும். எந்த ஒரு ஜாதகத்திலும் ராசி அல்லது ராசிநாதனை, லக்னம் அல்லது லக்னநாதனை குரு பார்த்தால் அதற்குத் தனிச்சிறப்பு உண்டு. 6-ல் கேது, 12-ல் ராகு இருப்பதால் போட்டி, பொறாமைகள், எதிர்ப்பு, இடையூறுகள் எல்லாம் விலகிவிடும். வீண் விரயங்களும் வெட்டிச் செலவுகளும் குறைந்துவிடும். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கடன் வாங்கினாலும் அது சுபக்கடனாக அமையும். 2-க்குடையவர் 8-ல் மறைந்தாலும் தன் ஸ்தானத்தைத் தானே பார்ப்பதால் பொருளாதார நிலையில் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை. செலவுகள் அதிகம்; வரவுகள் குறைவு என்றாலும் திட்டமிட்டு பட்ஜெட் போட்டு எல்லாவற்றையும் செயல்படுத்தலாம்.

பரிகாரம்: குருவருளும் திருவருளும் பெற சித்தர்கள் ஜீவசமாதியை வழிபடவும்.

கன்னி

(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

கன்னி ராசிநாதன் புதன் 7-ல் நீசம் என்றாலும் கேந்திரம் பெறுவதால் நீசபங்கம் ஏற்படுகிறது. அத்துடன் புதனுக்கு வீடு கொடுத்த குருவும், குருவுக்கு வீடு கொடுத்த செவ்வாயும் புதனைப் பார்க்கிறார்கள். புதன் 1, 10-க்குடையவர் என்பதால்- 12-க்குடைய சூரியன் சம்பந்தப்படுவதால் சிலருக்குத் தொழிற்துறையில் சுபச்செலவுகள், சுபமுதலீடுகள், சீர்திருத்தங்கள் ஏற்படலாம். சிலருக்கு உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். விரும்பிய இடப்பெயர்ச்சியும் உண்டாகலாம். படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலை தேடி அலைபவர்களுக்கு வெளிநாட்டு வேலை ஏற்படும். 12-ஆம் இடம் என்பது வெளியூர் வாசம், வெளிநாடு மாற்றம், ஊர் மாற்றம் இவற்றைக் குறிக்கும். 5, 6-க்குடைய சனி ராசியைப் பார்ப்பதாலும், புதன் சனியின் சாரத்தில் மாறுவதாலும் (உத்திரட்டாதி) வீடு, வாகனம், தொழில் சம்பந்தமாக கடன் வாங்கும் யோகமும் அமையும். சிலர் பிள்ளைகளின் மேற்படிப்புச் செலவு அல்லது சுபகாரியச் செலவு அல்லது திருமணம், வேலை, உத்தியோகம் போன்ற தேவைக்காக கடன் வாங்க நேரிடும். குடும்பச் சூழ்நிலையில் பந்தபாசம், ஒற்றுமை இவற்றுக்குக் குறைவில்லை. செலவுகளுக்குத் தேவையான வரவுகளும் வந்துசேரும். தேக நலனில் அக்கறை தேவை.

பரிகாரம்: ஆரோக்கியத்திற்காக தன்வந்திரி பகவானை வழிபடலாம். அல்லது தன்வந்திரி பகவானின் மூலமந்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.

துலாம்

(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

துலா ராசிநாதன் சுக்கிரன் 7-ல் பலம் பெற்று ராசியைப் பார்க்கிறார். பரணி நட்சத்திரத்தில் (தனது சொந்த நட்சத்திரம்) சஞ்சாரம் செய்கிறார். 1, 8-க்குடையவர் என்பதால் ஆயுள், ஆரோக்கியம் எதற்கும் குறைவில்லை. 4-ல் கேது நிற்பதாலும், 10-ல் ராகு நிற்பதாலும் தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான அலைச்சலும், அகால போஜனமும், அரைகுறை தூக்கமும் காணப்படலாம். சந்தர்ப்பத்தை அனுசரித்து சமயம்போல நடந்து கொண்டால் உடல்நலனில் பாதிப்பு ஏற்படாது. சொந்தத் தொழில் செய்கிறவர்களுக்கு போட்டி பொறாமைகள், எதிர்ப்பு இடையூறுகள் காணப்பட்டாலும் அவற்றை சமாளித்து முன்னேறலாம். பொருளாதாரத்தில் இழப்பு, ஏமாற்றம் ஏற்படாமல் சரிக்கட்டலாம். 2-க்குடைய செவ்வாயும், 3-க்குடைய குருவும் பரிவர்த்தனை என்பதால் வரவேண்டிய பாக்கிசாக்கிகள் முன்பின்னாக வந்துசேரும். கொடுக்க வேண்டிய பாக்கிசாக்கிகளை நாணயத்தைக் காப்பாற்ற வெளியில் புரட்டிக் கொடுக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். 6-க்குடையவர் 2-ல் இருப்பதால் அந்நியர் பணம் உங்கள் கையில் புரளும். அது பணமாகவும் இருக்கலாம் அல்லது பொருளாகவும் இருக்கலாம். தாய் அல்லது மனைவி அல்லது உடன்பிறப்புகள் வகையிலும் கடன் வாங்கி அல்லது நகைகளை வைத்து பணப்பற்றாக்குறையை சமாளிக்க நேரும்.

பரிகாரம்: பணத்தேவை பூர்த்தியடைய சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடலாம். அல்லது அவர் மூல மந்திரத்தை ஜெபிக்கலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)

விருச்சிக ராசிநாதன் செவ்வாய் 2-ல் குரு வீட்டில் இருக்க, அவருக்கு வீடு கொடுத்த குரு ஜென்ம ராசியில் செவ்வாய் வீட்டில் வக்ரமாக இருக்கிறார். இது பரிவர்த்தனை யோகம். குரு வக்ரம், செவ்வாய்- சனியோடு சேர்க்கை. பணக்கஷ்டம் இல்லையென்றாலும் வரவுக்கு மீறிய செலவுகள் காணப்படும். பென்ஷன் வாங்கி செலவு செய்கிறவர்களுக்கு புதுப்புது செலவுகள் வந்து சேரும். சொந்தத் தொழில் செய்கிறவர்கள், சில சரக்குகள் விலையேறும் என்று நம்பி முதலீடு செய்து "ஸ்டாக்' வைக்க நேரும். ஒருசிலர் வைத்துப் பார்ப்பதைவிட விற்றுப் பார்ப்பதுமேல் என்று லாபமில்லாமல் வாங்கிய விலைக்கே விற்று பணத்தை ரொட்டேஷன் செய்வார்கள். செவ்வாய் ராசிநாதன் என்பதோடு 6-க்குடையவரும் ஆவார். குரு ராசிக்கு 2, 5-க்குடையவர் என்றாலும் 10-ஆம் இடத்துக்கு 8-க்குடையவராவார். இதன் விளைவே மேற்கூறிய பலன்களுக்குக் காரணம். மேலும் 7-க்குடைய சுக்கிரன் 6-ல் மறைவதால்- தன் ஸ்தானத்துக்கு 12-ல் மறைவதால் சிலர் மனைவி வகையிலும் அல்லது ரத்தபந்த சொந்தத்தில் உள்ள பெண்கள் வகையிலும் கடன்பட நேரும். அதாவது அவர்கள் பணம் கொடுத்து உதவலாம். அல்லது தங்க நகைகளைக் கொடுத்து உதவலாம். சிலர் பழகிய நண்பர்கள் வகையில் தேவையில்லாத- காரணமில்லாத வருத்தமடையவும் கௌரவப் பிரச்சினையை சந்திக்கவும் நேரும். இது 3-ல் உள்ள கேதுவின் வேலை.

பரிகாரம்: கேதுவால் விளையும் கெடுதல் விலக தினசரி விநாயகர் பூஜை செய்யவும். விநாயகர் கவசம் பாராயணம் செய்யலாம்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. அவரோடு செவ்வாய் சேர்க்கை. செவ்வாய் வீடான மேஷத்தில் சனி நீசம். சனியின் வீடான மகரத்தில் செவ்வாய் உச்சம். ஒருவர் வீட்டில் இன்னொருவர் நீசமடைவதும், இன்னொருவர் வீட்டில் மற்றவர் உச்சமடைவதும் ஒரு வித்தியாசமான காம்பினேஷன். காவேரிப் பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகத்துக்கு ஒரு மாதிரியும், தமிழ்நாட்டுக்கு வேறுமாதிரியும் நடப்பதற்குச் சமம். அத்துடன் தனுசு ராசிக்கு ஜென்மச்சனி நடக்கிறது. ஜாதக தசாபுக்திகளைப் பொருத்து தனுசு ராசிக்காரர்களுக்கு நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். கெட்டது என்றால் பயந்துவிட வேண்டாம். படிப்பில் ஆர்வக்குறைவான மாணவரை டியூஷன் வாத்தியார் அடித்துத் திருத்திப் பாடம் புகட்டுவதுபோல! ஆசிரியரின் கண்டிப்பு மாணவனை முன்னேற்றம் அடையச் செய்யவேண்டும் என்ற குறிக்கோள்தான். அதுபோல ஜென்மச்சனி தொழில், வேலை, உத்தியோகத்தில் சுமையைத் தரலாம். அதில் கஷ்டங்களைச் சந்தித்தாலும் முடிவில் ஜெயிக்கும்போதும் சாதிக்கும்போது, சந்தோஷமும் சாதனையும் வெற்றியும் மகிழ்ச்சியும் ஏற்படும். அதேபோல வீடு, வாகனம், பூமி, மனை சம்பந்தமாக சக்திக்கு மீறிய செயல்களில் இறங்கவைத்து புலம்பவைக்கும். இவையெல்லாம் பொங்குசனியின் பூரிப்பான பலன்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் அவரவர் வயதுடன் ஒன்று சேர்த்து அந்த எண்ணிக்கையில் மிளகை சிவப்புத் துணியில் பொட்டலாம் கட்டி நெய்தீபம் ஏற்றவும்.

மகரம்

(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர ராசிநாதன் சனி தன் ராசிக்கு 12-ல் மறைகிறார். 4, 11-க்குடைய செவ்வாயோடு சம்பந்தம். ஜென்மத்தில் கேது, 7-ல் ராகு. மகர ராசிக்கு விரயச் சனி நடக்கிறது. சொந்தம் சுற்றம், பந்தம் பாசம், பழகிய நண்பர்கள் என எல்லாவகையிலும் கௌரவப் பிரச்சினையை சந்திக்கும் நேரம். ஒருசிலர் சம்பந்தம் செய்த வகையிலும் (சம்பந்தக்காரர் வகை) சஞ்சலம் அடைய வேண்டிய நேரம். மணமக்கள் சந்தோஷமாக இருந்தாலும் மணமக்களைப் பெற்றவர்களுக்குள் கௌரவப் போராட்டம், ஈகோ உணர்வு. கூடுமானவரை கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அல்லது விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது நல்லது. "விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', "நீரடித்து நீர் விலகாது' என்ற எல்லா வாசகங்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகொண்டு நடந்தால் சச்சரவுக்கு இடமில்லை. சந்தோஷத்துக்கும் குறைவில்லை. பொருளாதாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம். உத்தியோகத்திலும் செய்தொழிலிலும் இடையூறு ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் சிறிய விஷயங்களையும் பெரிய பிரச்சினைகளாக ஆக்கிக்கொள்ளும் மனோபாவங்களும் உண்டாகும். அது உடல்நலனையும் கெடுக்கும். தூக்கக்குறைவு, அகால போஜனம் அல்லது சாப்பிடப்பிடிக்காமல் டென்ஷன் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டால் எல்லா பிரச்சினைகளும் சூரியனைக்கண்ட பனிபோல விலகிவிடும்.

பரிகாரம்: வடக்குப் பார்த்த அம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

கும்பம்

(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்ப ராசிநாதன் சனி 11-ல் செவ்வாயோடு சேர்ந்திருக்கிறார். அவர்களுக்கு வீடு கொடுத்த குரு ராசிக்கு 10-ல் வக்ரம். குரு, செவ்வாய் பரிவர்த்தனை. 2-ல் நீச புதன். பொருளாதாரத்தில் சிரமங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் முயற்சிகள் கடுமையாக இருந்தாலும் தொழில் தடைப்படாது; லாபம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தெம்பும் ஆர்வமும் ஏற்படும். வேலை பார்ப்பவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். கூட்டு வியாபாரத்தில் இருப்பவர்கள் கருத்து வேற்றுமைகள் உருவாகி பிரச்சினைகளை சந்திக்க நேரும். "எடுத்தேன் கவிழ்த்தேன்' என்றில்லாமல் ஆர அமர சிந்தித்து செயல்படவேண்டும். நன்றாக நடந்துவரும் ஸ்தாபனத்தைக் கெடுப்பதற்கும் அழிப்பதற்கும் சிலர் ஐந்தாம் படை வேலை செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் செயல்படவேண்டும். கெடுக்கும் கருப்பு ஆடு எது என்று கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும்- அதாவது களையெடுப்பு நடத்தவேண்டும். 2-ல் சூரியன், புதன்; அவர்களுக்கு குரு, செவ்வாய் பார்வை. எதிர்பாராத லாபமும் அனுகூலமும் தனப்ராப்தியும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் குறித்தபடி நடந்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றலாம். வரவேண்டியது வந்துசேரும். கொடுக்கவேண்டியதும் கொடுக்கப்படும்.

பரிகாரம்: தொழில் மேன்மைக்கும் கடன் நிவர்த்திக்கும் லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீன ராசிநாதன் குரு 9-ல் நின்று ராசியைப் பார்ப்பது சிறப்பு. அதேபோல 9-க்குடைய செவ்வாய் 10-ல் நின்று ராசியைப் பார்ப்பதும் சிறப்பு. 9, 10-க்குடையவர்கள் பரிவர்த்தனை யோகம் பெறுவது அதனினும் சிறப்பு. இதுவரை துன்பம் தந்து வந்த சூழ்நிலைகள் எல்லாம் முற்றிலும் மாறிவிடும். நண்பர்களின் ஆதரவும், தொழில்துறையில் பணியாளர்களின் கடமைகளும் உங்களுக்கு உதவிகரமாகவும் அனுகூலமாகவும் அமையும். வேலை செய்கிறவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரிப்பும் ஆதரவும் திருப்தியளிக்கும். புதிய வீடு மாற்றம், புதிய பதவிமாற்றம் ஏற்படுவதால் மரியாதையும் மதிப்பும் பெருகும். குடும்பஸ்தானத்தில் சுக்கிரன் (பரணி) சுயசாரம் பெறுவதால் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஒற்றுமையும் நிலவும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவைப்படும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்துத் தேவையான பரிகார ஹோமங்கள் செய்துகொள்வது நல்லது. 10-ல் சனி நிற்க தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதால், தொழில்துறையில் புதிய திட்டங்களும் புதிய எண்ணங்களும் உருவானாலும் தீவிர ஆலோசனைக்குப்பிறகு செயலில் இறங்றுறுகலாம். குரு பார்வை உங்கள் எண்ணம் ஈடேற, இதயம் மகிழ்ச்சிடைய வழிகாட்டும். தர்மகர்மாதிபதி யோகம் அதற்குத் துணை செய்யும்.

பரிகாரம்: தொழில் முன்னேற்றத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பிரதோஷப் பூஜையும் பௌர்ணமி பூஜையும் உத்தமம்.